Monday, September 7, 2009

விவசாயி




விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த அரசாங்கம், விவசாயிகளின் துன்பத்தையும் தள்ளுபடி செய்துவிட்டதாகவே எண்ணி பேருவகை கொள்கிறது! அத்தோடு விவசாயிகளை மறந்தும் போகிறது! உண்மையில் விவசாயத்தின், விவசாயிகளின் நிலைதான் என்ன? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

ஈராயிரம் வருடம் பாதுகாத்து வந்த உலகப்பொதுமறையின் உண்மை இன்று கேலிக்கூத்தாகின்றது! சொல்லொணாத் துன்பங்கள்! தாங்கொணாத் துயரங்கள்! இதுவே இன்றைய விவசாயிகளின் நிலை. ஆயிரக்கணக்கு ஏக்கரில் நிலம் வைத்து ஆடம்பரமாய் வாழ்கிறவன் மாத்திரம்தான் விவசாயி என்று நினைத்தீரோ? அரைக்காணி நிலத்தை உழுது குடும்பச் சக்கரத்தை உருட்டுபவனும் விவசாயிதான்! மறந்துவிடதீர்கள்!

விவசாயத்திற்கு வாழ்வும் கேடும் இயற்கைதான். ஆனால் விவசாயிக்கு கேடு இருவரால் இன்று. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு விளைவித்த பண்டத்தை, பாதகத்தி மகன் இடைத்தரகன் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதென்ன? அதைக் கொள்ளை விலைக்கு விற்பதென்ன? விதைக்கையில் வேறுவழியின்றி வட்டிக்கு பணம் வாங்கி, விதைத்து, பாடுபட்டு, கதிரறுக்கையில் கழுத்தினில் கத்தி வைக்கிறான் கந்து வட்டிக்காரன்! பாதகம் செய்வோரை அன்று கொல்லவில்லை அரசு, நின்றும் கொல்லவில்லை தெய்வம். விவசாயி தோளில் சுமந்து செல்வது கலப்பையை மட்டுமல்ல, துயரத்தையுந்தான்!

ஓடி உழைக்கிறவன்
கூடி வாழ்கிறவன்
தேடிப்போவதில்லை சுகத்தை
வாடிப்போக விடுவதில்லை பயிரை!

கருக்கலில் கண்முழிப்பவன்
வாய்க்காலில் பல்துலக்குபவன்
கேணியில் குளிப்பவன்
கோணியில் தலைதுவட்டுபவன்
நெய்யூற்றி உண்பவனில்லை
மெய்வருத்த மறுதலிப்பவனில்லை!

காய்ந்துகெடுத்த இயற்கை பெய்தும் கெடுத்ததுவோ?
காப்பாற்ற வேண்டிய தெய்வம் கண்ணயர்ந்து போனதுவோ?
விதைவிதைக்கையில் கூட வந்த காலம்,
கதிரறுக்கையில் காலைவாரி விட்டதுவோ?
பட்டா நிலமது சுடுகாடாகிப்போனதுவோ?
மறுக்கப்பட்ட இனமோ விவசாய இனம்?
ஒடுக்கப்பட்ட சமூகமோ விவசாய சமூகம்?


பட்டாசு திரி சொருக
பாதகத்து பீடி சுத்த
சாலை சீரமைக்க
சாப்பாட்டுக்கடையில் மேசை துடைக்க
அடுக்குமாடிக் கட்டடங்களில் காப்பாளானாக
அடுக்களையில் எடுபிடியாக
குப்பைக்கூளம் அள்ளி வார
குளம் குட்டை தூர்வார
தண்ணீர் தெளித்து இஸ்திரி போட
சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய

பலே பலே! பல தொழில் கற்றுகொண்டுவிட்டானே விவசாயி!
அருமை அருமை! எவ்வளவு பெருமை நமக்கெல்லாம்!
அன்று அவன் விவசாயி
இன்றோ அன்றாடங்காய்ச்சி
மாறியது துன்பத்தின் விலாசம் மட்டுமே
மாறியது துன்பத்தின் விலாசம் மட்டுமே!

Thursday, August 27, 2009

கணினியும் கண்ணாடி இழைகளும்



பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ
ஆனாலும் பிரிவில்லை நம் காதலுக்கு!
வேற்று மதம் நீ! வேறு நாடு நீ!
காதலுக்கு கண்ணேயில்லை! மதமேது? நாடேது?

கட்டியணைதுக் கொள்கிறோம்
முத்தமிட்டும் கொள்கிறோம்!
குறும்புகள் பல செய்கிறேன்
அரும்பென உனைத் தொடுக்கிறேன்!
சிரித்து மகிழ்கிறோம்
செல்லமாய் கோபித்தும் கொள்கிறோம்!
பிரியும்போது வாடுகிறோம்
சேரும்போது சேர்த்துவைத்துக் கொண்டாடுகிறோம்!
கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறோம் - கடிவாளம்
கையிலிருந்தும் நிறுத்த மறக்கிறோம்!
காட்டாறாக நான் இருந்தால் -
நாணலாய் வளைந்துக் கொடுக்கிறாய் நீ!
காட்டு நெருப்பாய் நீ தகித்தால் -
பாறையிடுக்குச் சுனையாய் வடிகிறேன் நான்!
கணினியும் கண்ணாடி இழைகளுமே நம் காதல் தூதுவர்கள்!

பாராட்டிக் கொள்கிறோம் பலபொழுது
தாலாட்டிக் கொள்கிறோம் சிலபொழுது!
மெலிதாய் புன்னகைக்கிறோம் பலபொழுது
வெடித்து சிரிக்கிறோம் சிலபொழுது!
வாஞ்சையோடு பேசிக்கொள்கிறோம் பலபொழுது
வாதத்துக்காக பேசிக்கொள்கிறோம் சிலபொழுது!
நீ எனக்கு வேண்டும் இப்பொழுது - உன் கரம்
நான் பற்றும் நாள் எப்பொழுது?

சேர்ந்திருக்கையில் நேரம் பறந்துப் போகும்!
கலந்திருக்கையில் காமம் பற்றி எரியும்!
துணிந்திருக்கையில் துன்பம் விலகிப்போகும்!
பணிந்திருக்கையில் பெருமை வந்து சேரும்!
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காதல்கள்
காற்றடித்தாலோ வெயிலடித்தாலோ காணாமல் போகும் - ஆனால்
காத்திருந்து நம் காதல் காவியத்தில் சேரும்!
காத்திருந்து நம் காதல் காவியத்தில் சேரும்!
கணினியும் கண்ணாடி இழைகளுமே நம் காதலுக்குத் தூதுவர்கள்!!