Monday, January 18, 2010

காதலிலும் கலப்படம்பிறை நிலவென நெற்றி - அதில்
சிறு அருவியென ஒரு நெற்றிச்சூட்டி!
சங்கென்று கழுத்து - அதை
எங்கென்று தேட வைக்கும் சங்கிலிச்சரங்கள்!


காதினில் குதித்தாடும் தொங்கட்டான்!
களுக்கென்று கைகளில் சிரிக்கும் வளையல்கள்!
இல்லாத இடுப்பின் இருப்பை அறிவிப்பதற்கெனவே
ஒரு ஒட்டியாணம்!
பட்டு பாவை வருகிறாள்! வருகிறாளெனக்
கூவும் கொலுசுகள்!


ம்ம்ம்.....
செம்பு கலந்த தங்கம்தான் பெண்ணின் மேனி தீண்டும்!
தூய சுவர்ணத்திற்கு அந்த மோட்சம் கிட்டாது!
புனைதல் கலந்த காதல்தான் பெண்ணின் மனதை அள்ளும்!
தூய காதல் சீந்துவாரின்றி சாகும்!Saturday, January 9, 2010

ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்:

சென்னை புத்தக கண்காட்சியில் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனையான பரபரப்பு புத்தகம் இது! கிழக்கு பதிப்பக ஸ்டாலில் நான் இருந்த பத்து நிமிட நேரத்தில் மூன்று புத்தகங்கள் விற்றதை கண்கூடாக பார்த்தேன்! ஒரு படுகொலை! கொல்லப்பட்டவர் இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர்! மிகக் கச்சிதமாக திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றிய சதி! கொலையைச் செய்தது யார் என்று தொக்கி நின்ற கேள்வியில் இருந்து தொடங்குகிறது சரவெடி! சிஐஏ, மொசாட், உல்ஃபா தீவிரவாதிகள் என விரிகிறது விவாதம்! விடுதலைப் புலிகளோ என்று கேள்வி வரும்போது, ஒரு அதிகாரி அடித்துச் சொல்கிறார், புலிகளுக்கு அவ்வளவு சாமர்த்தியம் கிடையாது என்று! புத்தகம் முழுவதும் காவல் மற்றும் உளவு அதிகாரிகளைப் பார்த்து நாம் சிரிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன!

இந்திய உளவுத்துறை அமைப்பான ரா' வின் கேலிக்கூத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் புத்தக ஆசிரியரும், ராஜிவ் கொலைவழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுத் துறையின் தலைவருமான ரகோத்தமன் அவர்கள்! ஹரிபாபு எடுத்த புகைப்படங்களில் இருந்து விசாரணை சூடு பிடிக்கத் தொடங்குகிறது! சுபா சுந்தரம், என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் வலிய வந்து மாட்டிக்கொண்டது, நளினி முருகனின் காதல், பல்வேறு ஈழப் போராளிகளின் தமிழகத் தொடர்புகள், தமிழக அரசியல் தலைவர்களுக்கு இருந்த இலங்கைத் தொடர்புகள் என ஆர்வத்தைத் தூண்டும் சங்கதிகள் ஏராளம்! மாஸ்டர் ப்ரைன் ஒற்றைக்கண் சிவராசனின் திட்டங்கள் விறுவிறு! காவல்துறையின் அலட்சியங்கள், உளவுத்துறையின் பூசி மெழுகும் மனப்பாங்கு மற்றும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்ட முட்டாள்தனங்களைப் படிக்கையில் என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது! I have a mole in LTTE என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு, அந்த உளவாளி பிராபகரனின் முக்கிய தளபதி கிட்டுதான் என்று ரா'வின் தலைவர் கூறுவதைப் படிக்கையில் அப்படியே முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது!

விசாரணையின் போது பெரிய தலைகளை நழுவ விட்ட அதிகாரிகள், ஜெயின் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுத்த சிறப்புப் புலனாய்வுத் தலைவர் கார்த்திகேயன், சிவராசனிடம் அடுத்த தமிழக முதல்வராக வைகோவை ஆக்க வேண்டும் என விவாதித்த வைகோவின் தம்பி, ராஜிவ் கொலை நாளன்று திடீரென ரத்தான கலைஞரின் பொதுக்கூட்டம், இரவு கொலை நடந்து, யார் கொன்றது என்று எதுவும் புரியாத அதிகாலை, பிரதமரிடம் கொன்றது புலிகள்தான் என்று உளவுத்துறையை முந்திக்கொண்டு அழுத்தமாக தெரிவித்த சுப்பிரமணியம் சாமி என்று பகீர் தகவல்கள் ஏராளம்! இரவு பத்து மணிக்கு படிக்கத் தொடங்கி முடித்து பார்த்த போது மணி இரவு ஒன்று! அற்புதமான புத்தகம்!

Saturday, January 2, 2010

சத்தம்


சடசடவெனப் பெய்யுது மழை

சத்தம் மட்டுமே கேட்கின்றது!

வீல்வீலென்று அழுகிறது குழந்தை

காரணம் நானும் அறிகிலேன்!

தடதடவென ரயிலோசை

நேரம் இரவு ஏழு மணியெனப் புரிகின்றது!

டிக்டிக்கென கடிகாரச் சத்தம்

மின்சாரம் நின்றிருக்கக் கூடும்!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


பென்சிலுக்கு அழுத பிள்ளையின் குரல்

மளிகைக் கடைக்காரனிடம் மன்றாடிய மனைவியின் குரல்

மருத்துவச் செலவுக்கு மனுப்போட்ட தாயின் குரல்

எல்லாம் இப்போதுதான் இந்த செவிகளுக்கு எட்டுகின்றது!

பார்வையற்றுப் போனபின் தான் காது தெளிவாய் கேட்குமோ என்னவோ!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


இச்! இச்!


ஒரு நாள் யாருமற்ற பூங்காவில் அவளும் நானும் அமர்ந்திருக்கின்றோம். அருகருகில். மழைப்பெய்து ஓய்ந்த ஒரு மாரிக்காலம்! மழை மேகங்கள் முழுதும் விலகாத ஒரு மந்தகாச நேரம்! தனிமையில் அவளும் நானும்! வான் நிலவு தோன்றும் முன்னே பூமியில் ஓர் பூரண நிலவாய் பொலிவான அவள் முகம்! கார்முகில்கள் சற்று சிந்திவிட்டனவோ எனத் தோன்ற வைக்கும் அவள் பட்டுக் கூந்தல், இளங்காற்றின் வேண்டுகோளுக்கு இணங்க மெலிதாய் அலைபாய்கின்றது! அலைபாய்வது அவள் கூந்தல் மட்டுமல்ல என் மனதும்தான். அவள் எதோ சுவாரசியமாக சொல்லிக் கொண்டு இருந்தாள். மெலிதாய் சிரித்தேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். நானோ சிரித்துக் கொண்டே இருந்தேன். பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். சிரிப்பதை நிறுத்தவில்லை நான். மெலிதாய் முறைத்தாள். மேலும் சிரித்தேன். எதற்கு சிரிக்கின்றாய் என்றாள். பதில் சொல்லவில்லை, சிரித்துக் கொண்டே இருந்தேன். செல்லமாய் அடித்தாள். வெடித்துச் சிரித்தேன். நான் போகிறேன் என பொய்க்கோபம் காட்டி புறப்பட எழுந்தாள். அவள் கையைப் பற்றினேன். சட்டென அவளை இழுத்தேன். இச்! இச்!!

மாநகர பேருந்து


பெண்கள் தொட்டாற்சிணுங்கிகள் என அறியப்பட்டவர்கள்!

ஆண் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு மறக்கடிக்கப்பட்டது -

மாநகரப் பேருந்தில் பயணிக்கும் மகளிர்க்கு!

கட்டிய கணவன்மார்கள் சற்று மெனக்கெட வேண்டியிருக்கின்றது -

காதல் மனோநிலைக்கு மனைவிமார்களைக் கொண்டு வர!


பைக்கில் செல்லும் ஒரு தம்பதி

சில கண்கள் பெருமூச்சுடன் வெறிக்கின்றன -

பேருந்துக்குள் இருந்து!

ஏனோ பேருந்து பயணத்தையே நாடுகின்றது

சில முதிர்கன்னிகளின் மனம் மட்டும்!


வீடு


சமையலறை
பல பெண்களின் பல்வேறு சாதனைகள் சமாதியாகும் இடம்!

குளியலறை
ஆதாம் ஏவாள் காலத்துக்கு நம்மை அவ்வப்போது அழைத்து செல்லும் Time machine!

வரவேற்பறை
வீட்டிற்கு வந்த விருந்தினர்களை வரவேற்கத்தான் யாருமில்லை!
Serial 'களில் சிந்தையை தொலைத்த மனிதர்கள்!

படுக்கையறை
படுத்தவுடன் தூங்கி போகின்றன பொடிசுகள்
சிற்சில உடற்பயிற்சிகள் செய்துவிட்டு தூங்குகின்றன சிறுசுகள்
பழைய நினைவுகளில் பெருமூச்சுடன் பெருசுகள்!

Friday, January 1, 2010

முதற்காதல்அவள் மூச்சுக்காற்று - என்
வீட்டு ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கின்றது!
அவளின் சிரிப்பொலி - என்
வீட்டு சமையலறைப் பாத்திரங்களில் எதிரொலிக்கின்றது!
அவளது வாசம் - என்
வீட்டு பூஜையறையின் கற்பூரத் தட்டில் ஒட்டிக் கிடக்கின்றது!
அவளின் நினைவுகள் - என்
வீடெங்கும் வியாபித்திருக்கின்றது!

என் பால்ய பருவத்தில் - எங்கள்
வீட்டு மாடியில் குடியேறியது அவள் குடும்பம்!
என் இதயத்தில் குடியேறினாள் அவள் மட்டும்!

அதிகாலை நேரத்துப் பனியில்
இதழ் விரியாத - ஒரு
வெள்ளைச் செம்பருத்தி மொட்டு அவள்!

செக்கச் சிவந்த நிறம்
தக்கணுண்டு குட்டைப் பாவாடை
துறுதுறு கண்கள்
தாவிக் குதித்தோடிடும் நடை
கொள்ளைச் சிரிப்பு
வெள்ளைப் பேச்சு
எங்கள் தெருவுக்கு அவள் ஒரு குட்டி தேவதை!
எங்கள் வீட்டுக்கும்தான்!
எனக்கும் கூட!

ஒரே பள்ளி
ஒரே ஆட்டோவில் பயணம்
கண்விழித்துப் பார்த்து உணரும் காலை முதல்
கட்டாயத்துக்குட்பட்டு கண்மூடும் இரவு வரை
அவளும் நானும் ஒன்றாகவே!

விடுமுறை நாட்களுக்கு என்றுமே தனி வண்ணம்!
காலண்டரில் மட்டுமல்ல
நம் வாழ்விலும்தான்!
நாள் முழுக்க விளையாட்டு
வீட்டைச் சுற்றிச் சுற்றி நாங்கள் ஓடியதை - ஒரே
நேர்கோட்டில் ஓடியிருந்தால்,
கன்னியாகுமரி வரை ஒடி சூர்யோதயம் பார்த்திருப்போம்!

ஞாபகம் இருக்கிறதா பெண்ணே?
நம் அன்னையர் பலகாரங்களை அன்போடு பரிமாறிக்கொள்ள,
நாமோ குதூகலத்தைப் பரிமாறிக் கொண்டிருப்போம்!
உன் வீட்டுச் சமையலறையில் நானும்
என் வீட்டுச் சமையலறையில் நீயும் ருசிப்பார்த்திருப்போம்!
உணவறையில் பரிமாறும் முன்னே பசியாறியிருப்போம்!

பள்ளி ஆண்டு விழாவில் உன் நடனம்!
குடும்பத்துடன் நாம் சேர்ந்துப் பார்த்த பாட்ஷா திரைப்படம்!
பொருட்காட்சி ரங்கராட்டினம்!
விருந்தினர் வருகைகள்!
கோவில் சென்ற வெள்ளிக்கிழமைகள்!
பரமபதம், கேரம்போர்ட் விளையாடிய தருணங்கள்!
பலப்பல நிகழ்வுகள் -
பல்லாயிரம் நினைவுகள்!

என் வாழ்வில் விளையாட்டாய் வந்தாய்
இன்றோ வேர்விட்ட மரமாய் நிற்கின்றாய்!
காதலெனும் சிறகுகள் முளைத்தப் பறவையானேன்
வாழ்நாள் முழுதும் உன்னோடு சேர்ந்துப் பறக்க விருப்பம் தெரிவித்தேன்!
மரங்களுக்குச் சிறகுகள் இல்லை என மறுதலிக்கின்றாய்!
காதல் சிறகைக் கத்தரித்துவிட்டு - உன்
கிளையில் நட்புடன் தத்தி தத்தி நடக்கின்றேன்!
மீண்டும் சிறகுகள் முளைக்காது என்றுதான் நினைக்கின்றேன்!