சென்னை புத்தக கண்காட்சியில் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனையான பரபரப்பு புத்தகம் இது! கிழக்கு பதிப்பக ஸ்டாலில் நான் இருந்த பத்து நிமிட நேரத்தில் மூன்று புத்தகங்கள் விற்றதை கண்கூடாக பார்த்தேன்! ஒரு படுகொலை! கொல்லப்பட்டவர் இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர்! மிகக் கச்சிதமாக திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றிய சதி! கொலையைச் செய்தது யார் என்று தொக்கி நின்ற கேள்வியில் இருந்து தொடங்குகிறது சரவெடி! சிஐஏ, மொசாட், உல்ஃபா தீவிரவாதிகள் என விரிகிறது விவாதம்! விடுதலைப் புலிகளோ என்று கேள்வி வரும்போது, ஒரு அதிகாரி அடித்துச் சொல்கிறார், புலிகளுக்கு அவ்வளவு சாமர்த்தியம் கிடையாது என்று! புத்தகம் முழுவதும் காவல் மற்றும் உளவு அதிகாரிகளைப் பார்த்து நாம் சிரிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன!
இந்திய உளவுத்துறை அமைப்பான ரா' வின் கேலிக்கூத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் புத்தக ஆசிரியரும், ராஜிவ் கொலைவழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுத் துறையின் தலைவருமான ரகோத்தமன் அவர்கள்! ஹரிபாபு எடுத்த புகைப்படங்களில் இருந்து விசாரணை சூடு பிடிக்கத் தொடங்குகிறது! சுபா சுந்தரம், என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் வலிய வந்து மாட்டிக்கொண்டது, நளினி முருகனின் காதல், பல்வேறு ஈழப் போராளிகளின் தமிழகத் தொடர்புகள், தமிழக அரசியல் தலைவர்களுக்கு இருந்த இலங்கைத் தொடர்புகள் என ஆர்வத்தைத் தூண்டும் சங்கதிகள் ஏராளம்! மாஸ்டர் ப்ரைன் ஒற்றைக்கண் சிவராசனின் திட்டங்கள் விறுவிறு! காவல்துறையின் அலட்சியங்கள், உளவுத்துறையின் பூசி மெழுகும் மனப்பாங்கு மற்றும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்ட முட்டாள்தனங்களைப் படிக்கையில் என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது! I have a mole in LTTE என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு, அந்த உளவாளி பிராபகரனின் முக்கிய தளபதி கிட்டுதான் என்று ரா'வின் தலைவர் கூறுவதைப் படிக்கையில் அப்படியே முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது!
விசாரணையின் போது பெரிய தலைகளை நழுவ விட்ட அதிகாரிகள், ஜெயின் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுத்த சிறப்புப் புலனாய்வுத் தலைவர் கார்த்திகேயன், சிவராசனிடம் அடுத்த தமிழக முதல்வராக வைகோவை ஆக்க வேண்டும் என விவாதித்த வைகோவின் தம்பி, ராஜிவ் கொலை நாளன்று திடீரென ரத்தான கலைஞரின் பொதுக்கூட்டம், இரவு கொலை நடந்து, யார் கொன்றது என்று எதுவும் புரியாத அதிகாலை, பிரதமரிடம் கொன்றது புலிகள்தான் என்று உளவுத்துறையை முந்திக்கொண்டு அழுத்தமாக தெரிவித்த சுப்பிரமணியம் சாமி என்று பகீர் தகவல்கள் ஏராளம்! இரவு பத்து மணிக்கு படிக்கத் தொடங்கி முடித்து பார்த்த போது மணி இரவு ஒன்று! அற்புதமான புத்தகம்!
3 comments:
ungal tamil unarvukku valthukkal
நன்றி திரு. வேல்!
// கொல்லப்பட்டவர் இந்திய தேசத்தின் பிரதமர்! //
கொல்லப்பட்டவர் இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர்!
Post a Comment