அவள் மூச்சுக்காற்று - என்
வீட்டு ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கின்றது!
அவளின் சிரிப்பொலி - என்
வீட்டு சமையலறைப் பாத்திரங்களில் எதிரொலிக்கின்றது!
அவளது வாசம் - என்
வீட்டு பூஜையறையின் கற்பூரத் தட்டில் ஒட்டிக் கிடக்கின்றது!
அவளின் நினைவுகள் - என்
வீடெங்கும் வியாபித்திருக்கின்றது!
என் பால்ய பருவத்தில் - எங்கள்
வீட்டு மாடியில் குடியேறியது அவள் குடும்பம்!
என் இதயத்தில் குடியேறினாள் அவள் மட்டும்!
அதிகாலை நேரத்துப் பனியில்
இதழ் விரியாத - ஒரு
வெள்ளைச் செம்பருத்தி மொட்டு அவள்!
செக்கச் சிவந்த நிறம்
தக்கணுண்டு குட்டைப் பாவாடை
துறுதுறு கண்கள்
தாவிக் குதித்தோடிடும் நடை
கொள்ளைச் சிரிப்பு
வெள்ளைப் பேச்சு
எங்கள் தெருவுக்கு அவள் ஒரு குட்டி தேவதை!
எங்கள் வீட்டுக்கும்தான்!
எனக்கும் கூட!
ஒரே பள்ளி
ஒரே ஆட்டோவில் பயணம்
கண்விழித்துப் பார்த்து உணரும் காலை முதல்
கட்டாயத்துக்குட்பட்டு கண்மூடும் இரவு வரை
அவளும் நானும் ஒன்றாகவே!
விடுமுறை நாட்களுக்கு என்றுமே தனி வண்ணம்!
காலண்டரில் மட்டுமல்ல
நம் வாழ்விலும்தான்!
நாள் முழுக்க விளையாட்டு
வீட்டைச் சுற்றிச் சுற்றி நாங்கள் ஓடியதை - ஒரே
நேர்கோட்டில் ஓடியிருந்தால்,
கன்னியாகுமரி வரை ஒடி சூர்யோதயம் பார்த்திருப்போம்!
ஞாபகம் இருக்கிறதா பெண்ணே?
நம் அன்னையர் பலகாரங்களை அன்போடு பரிமாறிக்கொள்ள,
நாமோ குதூகலத்தைப் பரிமாறிக் கொண்டிருப்போம்!
நம் அன்னையர் பலகாரங்களை அன்போடு பரிமாறிக்கொள்ள,
நாமோ குதூகலத்தைப் பரிமாறிக் கொண்டிருப்போம்!
உன் வீட்டுச் சமையலறையில் நானும்
என் வீட்டுச் சமையலறையில் நீயும் ருசிப்பார்த்திருப்போம்!
உணவறையில் பரிமாறும் முன்னே பசியாறியிருப்போம்!
பள்ளி ஆண்டு விழாவில் உன் நடனம்!
குடும்பத்துடன் நாம் சேர்ந்துப் பார்த்த பாட்ஷா திரைப்படம்!
பொருட்காட்சி ரங்கராட்டினம்!
விருந்தினர் வருகைகள்!
கோவில் சென்ற வெள்ளிக்கிழமைகள்!
பரமபதம், கேரம்போர்ட் விளையாடிய தருணங்கள்!
பலப்பல நிகழ்வுகள் -
பல்லாயிரம் நினைவுகள்!
என் வாழ்வில் விளையாட்டாய் வந்தாய்
இன்றோ வேர்விட்ட மரமாய் நிற்கின்றாய்!
காதலெனும் சிறகுகள் முளைத்தப் பறவையானேன்
வாழ்நாள் முழுதும் உன்னோடு சேர்ந்துப் பறக்க விருப்பம் தெரிவித்தேன்!
மரங்களுக்குச் சிறகுகள் இல்லை என மறுதலிக்கின்றாய்!
காதல் சிறகைக் கத்தரித்துவிட்டு - உன்
கிளையில் நட்புடன் தத்தி தத்தி நடக்கின்றேன்!
மீண்டும் சிறகுகள் முளைக்காது என்றுதான் நினைக்கின்றேன்!
5 comments:
very nice..........
superb lines...
"பள்ளி ஆண்டு விழாவில் உன் நடனம்!
குடும்பத்துடன் நாம் சேர்ந்துப் பார்த்த பாட்ஷா திரைப்படம்!
பொருட்காட்சி ரங்கராட்டினம்!
விருந்தினர் வருகைகள்!
கோவில் சென்ற வெள்ளிக்கிழமைகள்!
பரமபதம், கேரம்போர்ட் விளையாடிய தருணங்கள்!
பலப்பல நிகழ்வுகள் -
பல்லாயிரம் நினைவுகள்!"
ஆட்டோகிராப் அருமை
மிக்க நன்றி செந்தில்!
/மரங்களுக்குச் சிறகுகள் இல்லை என மறுதலிக்கின்றாய்!
காதல் சிறகைக் கத்தரித்துவிட்டு - உன்
கிளையில் நட்புடன் தத்தி தத்தி நடக்கின்றேன்!
மீண்டும் சிறகுகள் முளைக்காது என்றுதான் நினைக்கின்றேன்!/
ஆம், சில நேரங்களில் காதல் நம்மோடு சேர்ந்து வளருவதில்லை.
நல்லாருக்கு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யுவா!
Post a Comment