Sunday, May 30, 2010

விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!

எனது கவிதை "மறந்துவிடு" வை வெளியிட்ட யூத்ஃபுல் விகடன் இணையதளத்துக்கு மனமார்ந்த நன்றிகள்!


http://youthful.vikatan.com/youth/Nyouth/mukilanpoem290510.asp


Wednesday, May 19, 2010

மொட்டவிழும் சுகந்தங்கள்



காதல் கவிதைகள்
உணர்ந்து உருகி
படைத்துவிட்டு
அவற்றின்
பொருளானவளைத்
தேடித் தவித்தல்
ஒரு சுகம்!


தனிமையை உணர்த்தும்
மாரிக்கால மாலையில்
பேர் தெரியாத
ஒரு மழலை
சிந்திச் சென்ற
பிரியச் சிரிப்பு
ஒரு சுகம்!


அவசரமாய் அலுவலகம்
செல்லும் காலை நேரம்
சாலையோரம்
பேருந்திற்காக காத்திருக்கும்
இளம்பெண்ணின்
மின்னல் பார்வை
ஒரு சுகம்!


சிறுவயதில்
பொருள் தெரியாமலே
பரிச்சயமான
ஒரு கண்ணதாசன் பாடல்
இன்று அர்த்தம் விளங்குகையில்
ஒரு சுகம்!


எதிர்பாராத தருணங்களில்
மொட்டவிழும்
சின்ன சின்ன சுகங்களின்
சுகந்தங்கள்!
                                                                                       

Thursday, May 13, 2010

தாண்டவக்கோனே


தாண்டவக்கோனே என முற்றும் வரிகளைக் கொண்டு அமைந்த சந்தப் பாடல்களுக்கு எப்போதுமே என் மனம் மயங்கும். இடைக்காட்டுச் சித்தர் துவங்கி வைத்த இந்த பாணியை இன்று வரை பல கவிஞர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களில் உடுமலை நாராயண கவி குறிப்பிடத்தக்கவர். அடியேனின் ஒரு சிறு முயற்சி! கிராமத்தானின் பார்வையில்... 


ஓடியாடி வேல செய்யறேன் தாண்டவக்கோனே - ஆனா
ஒல்டு மாங்க் தானே அடிக்கிறேன் தாண்டவக்கோனே!
ஒக்காந்து வட்டி வாங்கறான் தாண்டவக்கோனே - பயபுள்ள
ஒஸ்தி சரக்கு அடிக்கிறாம் பாரு தாண்டவக்கோனே! 


கல்லுடைக்கிற வேல செய்யறேன் தாண்டவக்கோனே - எங்
கையி ரெண்டும் காச்சிப் போச்சி தாண்டவக்கோனே!
பல்லுடைக்கிற வேல பாக்கறான் தாண்டவக்கோனே - பதவிசா 
புல்லட்டுல போறாம் பாரு தாண்டவக்கோனே!


பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு
பொட்டுத்தங்கம் வாங்கக் காணோம் தாண்டவக்கோனே!
அரசியல்வாதிக்கு அல்லக்கை அவன் தாண்டவக்கோனே - அட
அட்டகாசமா மினுக்குறாம் பாரு தாண்டவக்கோனே!


மண்ணள்ளுற வேல செய்யிறேன் தாண்டவக்கோனே - சின்ன
மழப்பெஞ்சா கூர ஒழுகுது தாண்டவக்கோனே!
கள்ளச் சாராயம் காச்சறான் தாண்டவக்கோனே - அழகா
கண்ணாடி வச்சக் காரவீட்டப் பாரு தாண்டவக்கோனே!


ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்கோனே - எனக்கு
ஒரு நல்லவழி காட்டய்யா தாண்டவக்கோனே!
சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!