Thursday, May 13, 2010

தாண்டவக்கோனே


தாண்டவக்கோனே என முற்றும் வரிகளைக் கொண்டு அமைந்த சந்தப் பாடல்களுக்கு எப்போதுமே என் மனம் மயங்கும். இடைக்காட்டுச் சித்தர் துவங்கி வைத்த இந்த பாணியை இன்று வரை பல கவிஞர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களில் உடுமலை நாராயண கவி குறிப்பிடத்தக்கவர். அடியேனின் ஒரு சிறு முயற்சி! கிராமத்தானின் பார்வையில்... 


ஓடியாடி வேல செய்யறேன் தாண்டவக்கோனே - ஆனா
ஒல்டு மாங்க் தானே அடிக்கிறேன் தாண்டவக்கோனே!
ஒக்காந்து வட்டி வாங்கறான் தாண்டவக்கோனே - பயபுள்ள
ஒஸ்தி சரக்கு அடிக்கிறாம் பாரு தாண்டவக்கோனே! 


கல்லுடைக்கிற வேல செய்யறேன் தாண்டவக்கோனே - எங்
கையி ரெண்டும் காச்சிப் போச்சி தாண்டவக்கோனே!
பல்லுடைக்கிற வேல பாக்கறான் தாண்டவக்கோனே - பதவிசா 
புல்லட்டுல போறாம் பாரு தாண்டவக்கோனே!


பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு
பொட்டுத்தங்கம் வாங்கக் காணோம் தாண்டவக்கோனே!
அரசியல்வாதிக்கு அல்லக்கை அவன் தாண்டவக்கோனே - அட
அட்டகாசமா மினுக்குறாம் பாரு தாண்டவக்கோனே!


மண்ணள்ளுற வேல செய்யிறேன் தாண்டவக்கோனே - சின்ன
மழப்பெஞ்சா கூர ஒழுகுது தாண்டவக்கோனே!
கள்ளச் சாராயம் காச்சறான் தாண்டவக்கோனே - அழகா
கண்ணாடி வச்சக் காரவீட்டப் பாரு தாண்டவக்கோனே!


ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்கோனே - எனக்கு
ஒரு நல்லவழி காட்டய்யா தாண்டவக்கோனே!
சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!

10 comments:

தோழி said...

இவற்றில்...

/// ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்கோனே - எனக்கு
ஒரு நல்லவழி காட்டய்யா தாண்டவக்கோனே!
சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!///

என்ற வரிகள் என்னை கவார்ந்தவை அருமை..

Mugilan said...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி! எனக்கு இடைக்காட்டுச் சித்தரின்
"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".

http://siththarkal.blogspot.com/2010/05/blog-post_8572.html

என்ற பாடலை அறிமுகப்படுத்தியதே தாங்கள்தான்! அதற்கு மனமார்ந்த நன்றி!

மதுரை சரவணன் said...

//பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு
பொட்டுத்தங்கம் வாங்கக் காணோம் தாண்டவக்கோனே!
அரசியல்வாதிக்கு அல்லக்கை அவன் தாண்டவக்கோனே - அட
அட்டகாசமா மினுக்குறாம் பாரு தாண்டவக்கோனே!//

உண்மைதான் இது தாண்டவக்கோனே..!
வாழ்த்துக்கள்

Mugilan said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன்!

தனி காட்டு ராஜா said...

//சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!//

உங்க சந்ததியக் காக்க நீங்க நல்லா பணம்
சம்பாதிக்கற வழிய பார்க்கணும் தாண்டவக்கோனே..
எங்கிட்ட வேண்ட கூடாது தாண்டவக்கோனே...

-இப்படிக்கு MR.தாண்டவக்கோன்



நல்ல தொரு முயற்சி ..........தொடருங்கள் ...

Mugilan said...

சரியா சொன்னீங்க ராஜா! ஆனா ஆத்திகமும் நாத்திகமும் தனி மனித சுதந்திரம்!
பாராட்டுக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குதுங்க:))))! ரசித்தேன்.

Mugilan said...

ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி! :-)

அகல்விளக்கு said...

நீங்களும் நம்மளமாதிரிதானா...

சந்தப்பாடல் நன்று நண்பரே...

குறிப்பாக இறுதி அத்தியாய வரிகள்...

Mugilan said...

நன்றி அகல்விளக்கு!

Post a Comment