ஒரு வசந்தகால இரவினில், உப்பரிகையில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் தலைவி! அவள் சிந்தனையைக் கலைக்காமல் மெல்ல அடியெடுத்து வந்து, அவளை பின்புறமாய் கட்டித்தழுவிக் கொள்கின்றான் தலைவன். பாவை முகத்தை தன் பக்கம் திருப்பியவன், அவளது மூடிய கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டு மனம் பதைக்கின்றான்! காரணம் கேட்கின்றான்! இனி தலைவனும், தலைவியும், தென்றலும், நிலவும்!
அத்தான் நீங்கள்
அனைத்துலகும் அலைந்தவர்!
ஆறும் நூறும் தெரிந்தவர்!
அத்துனைப் பெண்கள் உம்மை
அள்ளி முடிந்துக் கொள்ள
ஆனந்தமாய் முன்வந்த போதும்,
ஆட்டோடும் மாட்டோடும்
அல்லும் பகலும் அல்லாடும்
ஆயர்குல அரிவையென்னை
ஆட்கொண்ட காரணமென்ன?
அலுத்துப்போய் நாளை என்னுறவை
அறுத்து நீங்கள் விலகிப் போனால்...?
அய்யோ!
வெறுப்பதா? நானா? உனையா?
வடிவழகு வஞ்சி - உன்
வளைந்தாடும் சிறு இடுப்பினில்
வாழைத்தண்டு கால்களில்
வெண்டை விரல்களில்
வேட்கை மிகுந்த கண்களில்
வெட்டும் கழுத்தினில்
வட்ட வதனத்தில்
வாகை சூடிய கூந்தலினில்
வாடைக்காற்று மேவாத மேனியிலும்
விளையாடி ஒய்ந்த என்னிதழ்கள்
வேறிடம் தேடி ஓடுமோடி
வெள்ளந்தி வாய்ப்பேச்சழகி?
படிப்பறிவற்ற பேதை நான்
பொறுத்திடுங்கள் அத்தான்!
பார்த்து பார்த்து ரசிக்கின்றீர்
பெண்ணழகை! என்னழகை!
பெட்டை இவள் அழகெல்லாம்
பார்க்கும் போதே மறைந்து போனால்?
பருவவயதை நான் கடந்து போனால்?
காலமது கடந்தால் என்ன?
கேளாய்! கனியமுதே! - மேளம்
கொட்ட தாலி கட்டியவன் வாக்கு இது!
கட்டிலினில் உன் தேகம் பற்றியவன் நான்!
காதல் தீயால் எனைத் தொட்டவள் நீ - நான்
கட்டியணைக்கும் போது இனி கண்கள் மூடாதே!
கண்ணில் வழியும் என் காதலைக்
கணப்பொழுதும் காணாமற் போகாதே!
கண்டிருந்தால் வந்திராதே இந்த ஐயம் - நம்மைக்
கொண்டாட காத்திருக்கின்றதே இந்த வையம்!
தலைவி தன் மனம் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள்! தலைவனைக் கட்டியணைத்தவாறு நிலவைப் பார்த்து முறுவலித்தாள்! மெல்லச் சிரித்தது நிலவும்!
7 comments:
மன்னா முகிலனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்க சிபாரிசு செய்கிறேன்
@கே.ஆர்.பி.செந்தில்
//மன்னா முகிலனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்க சிபாரிசு செய்கிறேன்//
அடடா! கருணை உள்ளம் அய்யா உமக்கு! :-)
தலைவன் தலைவி உரையாடல் கவிதை அருமையாய் இருக்கிறது...
அழகு கவிதை நண்பரே.
// அவளது மூடிய கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டு மனம் பதைக்கின்றான்! //
அணுகுண்டை விட மோசமான ஆயுதமப்பா இது... அய்யோ பாவம் தலைவன்.
மிகவும் அருமையாக இருந்தது முகிலன். :)
நாடோடி, இராகவன் நைஜிரியா, V. Radhakrishan ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!
:) :) :)
Post a Comment