கேட்பாரில்லையென கொக்கரிக்கும் கடிமனமே!
பார்ப்பாரில்லையென பாய்ந்தோடும் பேய்மனமே!
தடுப்பாரில்லையென தடம்புரளும் திமிர்மனமே! - இனியும்
பொறுப்பாரில்லையென்றொரு நிலை வந்தால் என் செய்வாய்?
கட்டழகுப் பெண்ணைப் பார்த்து ஏன் கிறங்குகின்றாய்?
கிட்டப் போய் பேச எனையேன் தூண்டுகிறாய்?
நாளும் பொழுதும் உனைக் கட்டுப்படுத்தவே வீணாகிறதென் காலம்!
நல்ல முறையில் சொன்னால் உனக்கெல்லாம் விளங்காதோ?
யாருனக்கு சொல்லித் தந்தார் கர்வம் கொள்ள?
பாருனக்கு மட்டும் சொந்தமென எண்ணிக் கொண்டாயோ?
ஊரோடு ஒத்து வாழவேண்டுமென் புத்தி கெட்ட மனமே!
எனை நடுத்தெருவில் கொண்டுபோய் நிறுத்தச் சித்தமோ?
ஒரு நிலையில்லாமல் எங்கெங்கோ நீயும் அலைபாய்வது ஏன்?
தூணோடும் துரும்போடும் வாழும் இறைவன் எங்கே?
உன்னோடு வாழ அவனாலும் முடியாதென் கொடுமனமே!
உனை இலவசமாய்த் தந்தாலும் ஏற்றுக் கொள்வோருண்டோ?
இன்றே எனைவிட்டு நீங்கிவிடு என் புரட்டுமனமே!
நல்ல மனமில்லாதவன் இவனென்று ஊர் எனை ஏசும் சிலகாலம்!
கெட்ட மனமுமில்லாதவன் இவனென்று பிறகு பேசும் பலகாலம்!
அதற்குப் பிறகேனும் பிறக்கட்டும் எனக்கு நல்லகாலம்!
6 comments:
இந்த கவிதையில் நான் என்னைப்பார்க்கிறேன் முகிலன்
அழகுக் கவிதை நண்பரே.
மனம் ஒரு குரங்கு என்பதை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றீர்கள்.
வாழ்க உம் கவிதை.
@ செந்தில்
//இந்த கவிதையில் நான் என்னைப்பார்க்கிறேன் முகிலன்//
அன்பின் செந்தில்! நான் முடிந்தவரையில் அனைவருக்கும் பொதுவான விடயங்களையே என் பதிவுகளுக்கு கருப்பொருளாக கொள்கின்றேன்! உங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது!
@ இராகவன் நைஜிரியா
//அழகுக் கவிதை நண்பரே.
மனம் ஒரு குரங்கு என்பதை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றீர்கள்.
வாழ்க உம் கவிதை//
அன்பின் ராகவன்! தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி!
மனதை பற்றிய கவிதை அருமை நன்பரே....
மிக்க நன்றி நாடோடி!
Post a Comment