Thursday, August 27, 2009

கணினியும் கண்ணாடி இழைகளும்



பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ
ஆனாலும் பிரிவில்லை நம் காதலுக்கு!
வேற்று மதம் நீ! வேறு நாடு நீ!
காதலுக்கு கண்ணேயில்லை! மதமேது? நாடேது?

கட்டியணைதுக் கொள்கிறோம்
முத்தமிட்டும் கொள்கிறோம்!
குறும்புகள் பல செய்கிறேன்
அரும்பென உனைத் தொடுக்கிறேன்!
சிரித்து மகிழ்கிறோம்
செல்லமாய் கோபித்தும் கொள்கிறோம்!
பிரியும்போது வாடுகிறோம்
சேரும்போது சேர்த்துவைத்துக் கொண்டாடுகிறோம்!
கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறோம் - கடிவாளம்
கையிலிருந்தும் நிறுத்த மறக்கிறோம்!
காட்டாறாக நான் இருந்தால் -
நாணலாய் வளைந்துக் கொடுக்கிறாய் நீ!
காட்டு நெருப்பாய் நீ தகித்தால் -
பாறையிடுக்குச் சுனையாய் வடிகிறேன் நான்!
கணினியும் கண்ணாடி இழைகளுமே நம் காதல் தூதுவர்கள்!

பாராட்டிக் கொள்கிறோம் பலபொழுது
தாலாட்டிக் கொள்கிறோம் சிலபொழுது!
மெலிதாய் புன்னகைக்கிறோம் பலபொழுது
வெடித்து சிரிக்கிறோம் சிலபொழுது!
வாஞ்சையோடு பேசிக்கொள்கிறோம் பலபொழுது
வாதத்துக்காக பேசிக்கொள்கிறோம் சிலபொழுது!
நீ எனக்கு வேண்டும் இப்பொழுது - உன் கரம்
நான் பற்றும் நாள் எப்பொழுது?

சேர்ந்திருக்கையில் நேரம் பறந்துப் போகும்!
கலந்திருக்கையில் காமம் பற்றி எரியும்!
துணிந்திருக்கையில் துன்பம் விலகிப்போகும்!
பணிந்திருக்கையில் பெருமை வந்து சேரும்!
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காதல்கள்
காற்றடித்தாலோ வெயிலடித்தாலோ காணாமல் போகும் - ஆனால்
காத்திருந்து நம் காதல் காவியத்தில் சேரும்!
காத்திருந்து நம் காதல் காவியத்தில் சேரும்!
கணினியும் கண்ணாடி இழைகளுமே நம் காதலுக்குத் தூதுவர்கள்!!