Thursday, April 29, 2010

பெண்மையின் பெருங்கவலை



ஒரு வசந்தகால இரவினில், உப்பரிகையில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் தலைவி! அவள் சிந்தனையைக் கலைக்காமல் மெல்ல அடியெடுத்து வந்து, அவளை பின்புறமாய் கட்டித்தழுவிக் கொள்கின்றான் தலைவன். பாவை முகத்தை தன் பக்கம் திருப்பியவன், அவளது மூடிய கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டு மனம் பதைக்கின்றான்! காரணம் கேட்கின்றான்! இனி தலைவனும், தலைவியும், தென்றலும், நிலவும்!

அத்தான் நீங்கள்
அனைத்துலகும் அலைந்தவர்!
ஆறும் நூறும் தெரிந்தவர்!
அத்துனைப் பெண்கள் உம்மை
அள்ளி முடிந்துக் கொள்ள
ஆனந்தமாய் முன்வந்த போதும்,
ஆட்டோடும் மாட்டோடும்
அல்லும் பகலும் அல்லாடும்
ஆயர்குல அரிவையென்னை
ஆட்கொண்ட காரணமென்ன?
அலுத்துப்போய் நாளை என்னுறவை
அறுத்து நீங்கள் விலகிப் போனால்...?
அய்யோ! 

வெறுப்பதா? நானா? உனையா?
வடிவழகு வஞ்சி - உன்
வளைந்தாடும் சிறு இடுப்பினில்
வாழைத்தண்டு கால்களில்
வெண்டை விரல்களில்
வேட்கை மிகுந்த கண்களில்
வெட்டும் கழுத்தினில்
வட்ட வதனத்தில்
வாகை சூடிய கூந்தலினில்
வாடைக்காற்று மேவாத மேனியிலும்
விளையாடி ஒய்ந்த என்னிதழ்கள்
வேறிடம் தேடி ஓடுமோடி
வெள்ளந்தி வாய்ப்பேச்சழகி?

படிப்பறிவற்ற பேதை நான்
பொறுத்திடுங்கள் அத்தான்!
பார்த்து பார்த்து ரசிக்கின்றீர்
பெண்ணழகை! என்னழகை!
பெட்டை இவள் அழகெல்லாம்
பார்க்கும் போதே மறைந்து போனால்?
பருவவயதை நான் கடந்து போனால்?

காலமது கடந்தால் என்ன?
கேளாய்! கனியமுதே! - மேளம்
கொட்ட தாலி கட்டியவன் வாக்கு இது!
கட்டிலினில் உன் தேகம் பற்றியவன் நான்!
காதல் தீயால் எனைத் தொட்டவள் நீ - நான்
கட்டியணைக்கும் போது இனி கண்கள் மூடாதே!
கண்ணில் வழியும் என் காதலைக்
கணப்பொழுதும் காணாமற் போகாதே! 
கண்டிருந்தால் வந்திராதே இந்த ஐயம் - நம்மைக்
கொண்டாட காத்திருக்கின்றதே இந்த வையம்!


தலைவி தன் மனம் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள்!  தலைவனைக் கட்டியணைத்தவாறு நிலவைப் பார்த்து முறுவலித்தாள்! மெல்லச் சிரித்தது நிலவும்!

Tuesday, April 27, 2010

என் செய்வாய் மனமே?




கேட்பாரில்லையென கொக்கரிக்கும் கடிமனமே!

பார்ப்பாரில்லையென பாய்ந்தோடும் பேய்மனமே!

தடுப்பாரில்லையென தடம்புரளும் திமிர்மனமே! - இனியும்

பொறுப்பாரில்லையென்றொரு நிலை வந்தால் என் செய்வாய்?


கட்டழகுப் பெண்ணைப் பார்த்து ஏன் கிறங்குகின்றாய்?

கிட்டப் போய் பேச எனையேன் தூண்டுகிறாய்?

நாளும் பொழுதும் உனைக் கட்டுப்படுத்தவே வீணாகிறதென் காலம்!

நல்ல முறையில் சொன்னால் உனக்கெல்லாம் விளங்காதோ?


யாருனக்கு சொல்லித் தந்தார் கர்வம் கொள்ள?

பாருனக்கு மட்டும் சொந்தமென எண்ணிக் கொண்டாயோ?

ஊரோடு ஒத்து வாழவேண்டுமென் புத்தி கெட்ட மனமே!

எனை நடுத்தெருவில் கொண்டுபோய் நிறுத்தச் சித்தமோ?


ஒரு நிலையில்லாமல் எங்கெங்கோ நீயும் அலைபாய்வது ஏன்?

தூணோடும் துரும்போடும் வாழும் இறைவன் எங்கே?

உன்னோடு வாழ அவனாலும் முடியாதென் கொடுமனமே!

உனை இலவசமாய்த் தந்தாலும் ஏற்றுக் கொள்வோருண்டோ?


இன்றே எனைவிட்டு நீங்கிவிடு என் புரட்டுமனமே!

நல்ல மனமில்லாதவன் இவனென்று ஊர் எனை ஏசும் சிலகாலம்!

கெட்ட மனமுமில்லாதவன் இவனென்று  பிறகு  பேசும் பலகாலம்!

அதற்குப் பிறகேனும் பிறக்கட்டும் எனக்கு நல்லகாலம்!


Wednesday, April 14, 2010

கடவுள் ஏமாந்தான்!


கூர்காது கொண்ட மானைப் பிடிக்க சிங்கத்துக்குத் தெரியும் - சிங்கத்திடம்
தோற்காது, பாய்ந்தோட மானுக்கும் தெரியும்!
நெளிந்து ஓடும் பாம்பைப் பிடிக்க வல்லூற்றுக்குத் தெரியும் - வல்லூற்றிற்கு 
இரையாகமல் ஒளிந்து ஓட பாம்பிற்கும் தெரியும்!
வழுக்கிடும் விலாங்கைப் பிடிக்க நாரைக்குத் தெரியும் - நாரையிடம் 
தன்னை இழக்காமல் நீந்திச் செல்ல விலாங்கிற்கும் தெரியும்!

இந்த பிழைப்பு விளையாட்டைப் பார்த்து பார்த்து
கடவுள் சலித்திட்டான்!
வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என இழைத்து இழைத்து - ஒரு
உயிரினத்தை படைத்திட்டான்!
மனித இனம் எனப் பெயரிட்டான் - தன்
ஆறாவது அறிவை விரும்பி தந்திட்டான்!
உழைத்த களைப்பினில் கடவுள் கொஞ்சம் தூங்கிப் போனான்
விழித்துப் பார்த்த கடவுள் விக்கித்து நின்றான்!

இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!

Tuesday, April 6, 2010

முழுமை




தூக்கி எறிந்த காகிதத்தில் 
பறந்து போன ஒரு கவிதையைப்போல்

தகித்து தணிந்த அடுப்பினில்
எரியாத ஒரு விறகு துண்டைப்போல் 

யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில் 
வழியும் ஒரு தேனிசையைப்போல்

ஓடி விளையாட மழலையரின்றி 
வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு பூங்கவைப்போல் 

முழுதாய் பயன்படுத்த மிக முயன்றும் 
முற்றாய் சிறப்பதில்லை வாழ்க்கை!