Friday, February 7, 2020

ஊடல்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
ஊடலுக்கு பிந்தைய கூடலில்தான் எத்தனை உயிர்ப்பு!
  
பட்டுபோய்விடுமோ என்றஞ்சிய பயிரில் புதுமழை பெய்ததுபோல் 
விட்டுப்போய்விடுமோ என்றஞ்சிய உறவில் புத்துயிர் புகுத்தியது காண்
பிரிவினியென்றுமேயில்லை யென்பதுபோல் படர்ந்து 
உயிருடலில்லை யென்பதுபோல் கிடந்தது 
    இறுகிக்கிடந்த மனவணைகள் உடைந்து 
    இணைந்தனவே இருவுள்ளங்களும் ...

Wednesday, February 20, 2019

உன் அருகே வர முயற்சிக்கிறேன்...
                                                           
அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை
அதனால் அவள் வீட்டிலிருந்தாள்!
தாத்தா பாட்டி  வேறு ஊரிலிருந்து வந்திருந்தனர்!
இவையே போதுமான காரணங்கள் - நீ
பள்ளி செல்ல விரும்பாதத்திற்கு!
படுக்கையை விட்டு எழ மறுத்து ,
அக்காவுடன் விளையாடி கொண்டிருந்தாய்!
கிளம்ப மறுத்து அம்மாவுக்கு ஆட்டம் காட்டிக்  கொண்டிருந்தாய்!
உண்ண மறுத்து நேரம் கடத்திக்  கொண்டிருந்தாய்!
அலுவலகத்தில் இன்றொரு அவசிய கலந்துரையாடல் எனக்கு
நேரமோ ஓடி கொண்டிருந்தது - உன்
பள்ளி வாகனமும் காத்து கொண்டிருந்தது!
யாவும் சேர்த்தென்னை அழுத்த
உன் முதுகில் அடியென விழுந்தது
என் மனதில் முள்ளென தைத்தது!
பெருக்கெடுத்த உன் கண்ணீரும்
முறைத்தபடி வாகனம் ஏறிய உன் முகமும்
என் மனதை விட்டு அகலவில்லை நாளெல்லாம்!
சாயந்திரம் உன்னை அழைத்துக்கொள்ளும் போது
நீ சிரித்தபடி வருவாயென எனக்குத் தெரியும்!
தெய்வம் இருக்கின்றதா என்பதே புரியாத போது - அது 
மன்னிக்குமா  என்பது யாருக்கு தெரியும்? 
ஆனால் நீ மன்னிப்பாயென்பதை நானறிவேன்! 
உன்னிடம் இந்த கவிதை மூலம் மன்னிப்பு கேட்டு - குழந்தைமையில் 
உன் அருகே வர முயற்சிக்கிறேன்!
மன்னித்து விடடி என் அருமை மகளே
என்றென்றும் அன்புடன் உன் தந்தை !!!

Saturday, July 18, 2015

மலரும் தருணம்

சந்திரோதயம் அழகுதான்
 சூர்யோதயமும் அழகுதான்
 மொட்டவிழ்ந்து பூ பூக்கும் தருணம்
 மகத்தான அழகுதான்
 கையை உயர்த்தி
 காலை உதறி
 உடலை குறுக்கி
 சோம்பல் முறித்து
 முகத்தை சுருக்கி
 கண்ணை சிமிட்டி - பின்
 என்னைப் பார்த்து சிரித்தபடி
 என் மகள்
 கண் விழிக்கும் தருணத்திற்கு
 இவையெல்லாம் ஈடாகுமா?Thursday, November 25, 2010

அப்படித்தான் தோன்றியது


ஒற்றை ரோஜா
ஓர் ஊரையே ஆக்கிரமிக்க முடியுமா?
அப்படித்தான் தோன்றியது
அவள் என் இதயத்தை நிறைத்தபோது!


மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைப் பார்த்தபோது!


ஒரேயொரு நீர்த்துளி
சூரியனுக்கே மைனஸ் டிகிரி குளிர் தருமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னோடு பேசியபோது!


தென்றல் காற்று - ஒரு
பனைமரத்தை வேரோடு சாய்த்திடுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைத் தீண்டியபோது!


அணில் மூச்சின் வெப்பம் - ஒரு
காட்டையே கொளுத்தி முடிக்குமோ?
அப்படித்தான் தோன்றுகின்றது
அவளைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும்!Tuesday, November 16, 2010

நீயின்றி...பின்மாலை நேரம்
பேய் மழைமேகங்கள்
பெய்தொழிந்த பின்னே
பேரமைதி!

ஏதோ விசும்பல் சத்தம் கேட்க
விட்டத்தை வெறித்த பார்வையின்
மட்டத்தை தாழ்த்திப் பார்த்தேன்!
உனது அழைப்பின்றி
சீந்தவும் ஆளின்றி
அழுது வீங்கிய கன்னத்தோடு
எனது அலைபேசி...
என்னைப் போலவே!

Monday, July 26, 2010

மாண்புமிகுஉடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்குகின்றாய்! 
மண் உன்னை உரமாய் கூட ஏற்க விரும்பாது என்பதை அறிவாயா?

காவிரியை தமிழகத்திற்கு கட்டி இழுத்து வருவேன் என சூளுரைக்கின்றாய்! 
ஒவ்வொரு முறை நீ குளிக்கும்போதும் 
தாம் இழிநிலை அடைந்ததை எண்ணி 
தலையில் அடித்துக் கொள்ளுமாம் தண்ணீர்!  

தமிழர்க்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என அறிக்கை விடுகின்றாய்! 
அசுத்தத்தை எரிக்கும் நெருப்புக் கூட உன்னால் 
அசுத்தமாவானேன் என விலகி ஓடும்!

காற்றுக்கென்ன வேலியென கொப்பளித்து பேசுகின்றாய்! 
உன் நாசிக்குள் நுழைகையில் 
மூச்சுத்திணறல் ஏற்பட்டு தவிக்கின்றது காற்று!

வானமே நமக்கு எல்லையென வீரமுழக்கமிடுகின்றாய்!
ஆதி அந்தம் இல்லாத ஆகாயம் உன்னைக் கண்டால் 
ஓர் குடுவைக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளும்! 

பஞ்ச பூதங்களும் வெறுக்கும் 
பஞ்சமா பாதகம் புரியும் உம்மை 
தமிழக மக்கள் எப்போதும் 
மாண்புமிகுவென அன்போடு(?) அழைப்பர்!

Sunday, July 25, 2010

காதல்.கா(ம)ம்
கண்ணைப் பார்
பார்த்து பேசு 
பேசி சிரி
சிரித்து பழகு 
பழகி நேசி 
நேசித்து உணர் 
உணர்ந்து மயங்கு 
மயங்கி காதலி 
காதலித்து மணம்புரி 
மணம்புரிந்து கூடு 
கூடி ஊடு 
ஊடி கூடு 
கூடி ஊடு 
ஊடி கூடு 
கூடி ஊடு 
ஊடி கூடு 
...
...
( மன்னிக்கவும்! கவிதை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி விட்டது! )

Monday, July 5, 2010

நான் பார்த்த சிட்னி
சில்லென்ற குளிர் 
சலனமில்லாத கடல் 

தும்ம வைக்காத காற்று 
தூரத்து மழை மேகங்கள் 

வெப்பம் காட்டாத சூரியன் 
வெளிர்நிற லில்லி மலர்கள் 

வேகமான ரயில் போக்குவரத்து 
விதிகளை மீறாத சாலைப்போக்குவரத்து

பாசிநிறக் கண்கொண்ட பாவையர் 
பளிங்குநிற மேனிகொண்ட பதுமைகள் 

இடுங்கிய கண்கள் கொண்ட  சீனப் பெண்டிர் - அதுவும் 
இல்லையெனத் தோன்றும் அவர் சிரிக்கையிலே 
  
ரோஜா மொட்டென மழலைகள் - ஏழு 
ராகம் சிந்தும் அவர் பேசுகையிலே 

வெறிச்சோடிய ரயில் நிலையங்கள் 
வெட்கத்தில் நனையாத முத்தங்கள் 


கேளிக்கை விடுதிகள் 
கொண்டாட்ட விடுமுறைகள் 

பூலோக சொர்கந்தான் சிட்னி 
பூமகளே நீ அருகில் இருந்தால்! 
 

Sunday, July 4, 2010

நீ சிரித்திருக்க ...

அன்பே! 
உன் பூவிதழ் புன்னகையை 
கண் சிமிட்டாமல் காண்பேன்! 
நீ சிரிக்கையில் குறுகும் உன் கார்விழியை  
காலமெல்லாம் காண விரும்புவேன்!
உன் சிரிப்பினைப் பாதுகாக்க 
எப்போதும் முயல்வேன்!
அத்தகைய முயற்சிகள் 
சில சமயங்களில் 
உன்னை அழ வைக்கவும் கூடும்!   

Sunday, May 30, 2010

விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!

எனது கவிதை "மறந்துவிடு" வை வெளியிட்ட யூத்ஃபுல் விகடன் இணையதளத்துக்கு மனமார்ந்த நன்றிகள்!


http://youthful.vikatan.com/youth/Nyouth/mukilanpoem290510.asp


Wednesday, May 19, 2010

மொட்டவிழும் சுகந்தங்கள்காதல் கவிதைகள்
உணர்ந்து உருகி
படைத்துவிட்டு
அவற்றின்
பொருளானவளைத்
தேடித் தவித்தல்
ஒரு சுகம்!


தனிமையை உணர்த்தும்
மாரிக்கால மாலையில்
பேர் தெரியாத
ஒரு மழலை
சிந்திச் சென்ற
பிரியச் சிரிப்பு
ஒரு சுகம்!


அவசரமாய் அலுவலகம்
செல்லும் காலை நேரம்
சாலையோரம்
பேருந்திற்காக காத்திருக்கும்
இளம்பெண்ணின்
மின்னல் பார்வை
ஒரு சுகம்!


சிறுவயதில்
பொருள் தெரியாமலே
பரிச்சயமான
ஒரு கண்ணதாசன் பாடல்
இன்று அர்த்தம் விளங்குகையில்
ஒரு சுகம்!


எதிர்பாராத தருணங்களில்
மொட்டவிழும்
சின்ன சின்ன சுகங்களின்
சுகந்தங்கள்!
                                                                                       

Thursday, May 13, 2010

தாண்டவக்கோனே


தாண்டவக்கோனே என முற்றும் வரிகளைக் கொண்டு அமைந்த சந்தப் பாடல்களுக்கு எப்போதுமே என் மனம் மயங்கும். இடைக்காட்டுச் சித்தர் துவங்கி வைத்த இந்த பாணியை இன்று வரை பல கவிஞர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களில் உடுமலை நாராயண கவி குறிப்பிடத்தக்கவர். அடியேனின் ஒரு சிறு முயற்சி! கிராமத்தானின் பார்வையில்... 


ஓடியாடி வேல செய்யறேன் தாண்டவக்கோனே - ஆனா
ஒல்டு மாங்க் தானே அடிக்கிறேன் தாண்டவக்கோனே!
ஒக்காந்து வட்டி வாங்கறான் தாண்டவக்கோனே - பயபுள்ள
ஒஸ்தி சரக்கு அடிக்கிறாம் பாரு தாண்டவக்கோனே! 


கல்லுடைக்கிற வேல செய்யறேன் தாண்டவக்கோனே - எங்
கையி ரெண்டும் காச்சிப் போச்சி தாண்டவக்கோனே!
பல்லுடைக்கிற வேல பாக்கறான் தாண்டவக்கோனே - பதவிசா 
புல்லட்டுல போறாம் பாரு தாண்டவக்கோனே!


பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு
பொட்டுத்தங்கம் வாங்கக் காணோம் தாண்டவக்கோனே!
அரசியல்வாதிக்கு அல்லக்கை அவன் தாண்டவக்கோனே - அட
அட்டகாசமா மினுக்குறாம் பாரு தாண்டவக்கோனே!


மண்ணள்ளுற வேல செய்யிறேன் தாண்டவக்கோனே - சின்ன
மழப்பெஞ்சா கூர ஒழுகுது தாண்டவக்கோனே!
கள்ளச் சாராயம் காச்சறான் தாண்டவக்கோனே - அழகா
கண்ணாடி வச்சக் காரவீட்டப் பாரு தாண்டவக்கோனே!


ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்கோனே - எனக்கு
ஒரு நல்லவழி காட்டய்யா தாண்டவக்கோனே!
சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!

Thursday, April 29, 2010

பெண்மையின் பெருங்கவலைஒரு வசந்தகால இரவினில், உப்பரிகையில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் தலைவி! அவள் சிந்தனையைக் கலைக்காமல் மெல்ல அடியெடுத்து வந்து, அவளை பின்புறமாய் கட்டித்தழுவிக் கொள்கின்றான் தலைவன். பாவை முகத்தை தன் பக்கம் திருப்பியவன், அவளது மூடிய கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டு மனம் பதைக்கின்றான்! காரணம் கேட்கின்றான்! இனி தலைவனும், தலைவியும், தென்றலும், நிலவும்!

அத்தான் நீங்கள்
அனைத்துலகும் அலைந்தவர்!
ஆறும் நூறும் தெரிந்தவர்!
அத்துனைப் பெண்கள் உம்மை
அள்ளி முடிந்துக் கொள்ள
ஆனந்தமாய் முன்வந்த போதும்,
ஆட்டோடும் மாட்டோடும்
அல்லும் பகலும் அல்லாடும்
ஆயர்குல அரிவையென்னை
ஆட்கொண்ட காரணமென்ன?
அலுத்துப்போய் நாளை என்னுறவை
அறுத்து நீங்கள் விலகிப் போனால்...?
அய்யோ! 

வெறுப்பதா? நானா? உனையா?
வடிவழகு வஞ்சி - உன்
வளைந்தாடும் சிறு இடுப்பினில்
வாழைத்தண்டு கால்களில்
வெண்டை விரல்களில்
வேட்கை மிகுந்த கண்களில்
வெட்டும் கழுத்தினில்
வட்ட வதனத்தில்
வாகை சூடிய கூந்தலினில்
வாடைக்காற்று மேவாத மேனியிலும்
விளையாடி ஒய்ந்த என்னிதழ்கள்
வேறிடம் தேடி ஓடுமோடி
வெள்ளந்தி வாய்ப்பேச்சழகி?

படிப்பறிவற்ற பேதை நான்
பொறுத்திடுங்கள் அத்தான்!
பார்த்து பார்த்து ரசிக்கின்றீர்
பெண்ணழகை! என்னழகை!
பெட்டை இவள் அழகெல்லாம்
பார்க்கும் போதே மறைந்து போனால்?
பருவவயதை நான் கடந்து போனால்?

காலமது கடந்தால் என்ன?
கேளாய்! கனியமுதே! - மேளம்
கொட்ட தாலி கட்டியவன் வாக்கு இது!
கட்டிலினில் உன் தேகம் பற்றியவன் நான்!
காதல் தீயால் எனைத் தொட்டவள் நீ - நான்
கட்டியணைக்கும் போது இனி கண்கள் மூடாதே!
கண்ணில் வழியும் என் காதலைக்
கணப்பொழுதும் காணாமற் போகாதே! 
கண்டிருந்தால் வந்திராதே இந்த ஐயம் - நம்மைக்
கொண்டாட காத்திருக்கின்றதே இந்த வையம்!


தலைவி தன் மனம் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள்!  தலைவனைக் கட்டியணைத்தவாறு நிலவைப் பார்த்து முறுவலித்தாள்! மெல்லச் சிரித்தது நிலவும்!

Tuesday, April 27, 2010

என் செய்வாய் மனமே?
கேட்பாரில்லையென கொக்கரிக்கும் கடிமனமே!

பார்ப்பாரில்லையென பாய்ந்தோடும் பேய்மனமே!

தடுப்பாரில்லையென தடம்புரளும் திமிர்மனமே! - இனியும்

பொறுப்பாரில்லையென்றொரு நிலை வந்தால் என் செய்வாய்?


கட்டழகுப் பெண்ணைப் பார்த்து ஏன் கிறங்குகின்றாய்?

கிட்டப் போய் பேச எனையேன் தூண்டுகிறாய்?

நாளும் பொழுதும் உனைக் கட்டுப்படுத்தவே வீணாகிறதென் காலம்!

நல்ல முறையில் சொன்னால் உனக்கெல்லாம் விளங்காதோ?


யாருனக்கு சொல்லித் தந்தார் கர்வம் கொள்ள?

பாருனக்கு மட்டும் சொந்தமென எண்ணிக் கொண்டாயோ?

ஊரோடு ஒத்து வாழவேண்டுமென் புத்தி கெட்ட மனமே!

எனை நடுத்தெருவில் கொண்டுபோய் நிறுத்தச் சித்தமோ?


ஒரு நிலையில்லாமல் எங்கெங்கோ நீயும் அலைபாய்வது ஏன்?

தூணோடும் துரும்போடும் வாழும் இறைவன் எங்கே?

உன்னோடு வாழ அவனாலும் முடியாதென் கொடுமனமே!

உனை இலவசமாய்த் தந்தாலும் ஏற்றுக் கொள்வோருண்டோ?


இன்றே எனைவிட்டு நீங்கிவிடு என் புரட்டுமனமே!

நல்ல மனமில்லாதவன் இவனென்று ஊர் எனை ஏசும் சிலகாலம்!

கெட்ட மனமுமில்லாதவன் இவனென்று  பிறகு  பேசும் பலகாலம்!

அதற்குப் பிறகேனும் பிறக்கட்டும் எனக்கு நல்லகாலம்!


Wednesday, April 14, 2010

கடவுள் ஏமாந்தான்!


கூர்காது கொண்ட மானைப் பிடிக்க சிங்கத்துக்குத் தெரியும் - சிங்கத்திடம்
தோற்காது, பாய்ந்தோட மானுக்கும் தெரியும்!
நெளிந்து ஓடும் பாம்பைப் பிடிக்க வல்லூற்றுக்குத் தெரியும் - வல்லூற்றிற்கு 
இரையாகமல் ஒளிந்து ஓட பாம்பிற்கும் தெரியும்!
வழுக்கிடும் விலாங்கைப் பிடிக்க நாரைக்குத் தெரியும் - நாரையிடம் 
தன்னை இழக்காமல் நீந்திச் செல்ல விலாங்கிற்கும் தெரியும்!

இந்த பிழைப்பு விளையாட்டைப் பார்த்து பார்த்து
கடவுள் சலித்திட்டான்!
வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என இழைத்து இழைத்து - ஒரு
உயிரினத்தை படைத்திட்டான்!
மனித இனம் எனப் பெயரிட்டான் - தன்
ஆறாவது அறிவை விரும்பி தந்திட்டான்!
உழைத்த களைப்பினில் கடவுள் கொஞ்சம் தூங்கிப் போனான்
விழித்துப் பார்த்த கடவுள் விக்கித்து நின்றான்!

இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!

Tuesday, April 6, 2010

முழுமை
தூக்கி எறிந்த காகிதத்தில் 
பறந்து போன ஒரு கவிதையைப்போல்

தகித்து தணிந்த அடுப்பினில்
எரியாத ஒரு விறகு துண்டைப்போல் 

யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில் 
வழியும் ஒரு தேனிசையைப்போல்

ஓடி விளையாட மழலையரின்றி 
வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு பூங்கவைப்போல் 

முழுதாய் பயன்படுத்த மிக முயன்றும் 
முற்றாய் சிறப்பதில்லை வாழ்க்கை!

Tuesday, March 30, 2010

கோர்த்து வைத்த நட்பு
சேர்த்து வைத்த செல்வம் செலவழிந்து போனது!
பார்த்து பழகிய காலம் மெல்ல ஊர்ந்து சென்றது!
வார்த்து எடுத்த தங்கம் தன் பொலிவை இழந்தது - ஒரு நூலில் 
கோர்த்து வைத்த நட்பு எங்கெங்கோ சிதறியது !


Wednesday, February 24, 2010

ஊசிமுனை சரித்திரம்


வாய்ப்புகள் கதவைத் தட்டிய தருணத்தில்
காதினை இறுக மூடிக் கொண்டேன்
தேவதைகள் அப்படியே ஆகட்டும் 
எனக் கூறிய பொழுதில்   
என்னை நானே சபித்துக் கொண்டேன்!
பட்டாம்பூச்சியென சிறகடிக்க வேண்டிய பருவத்தில் 
பட்டுக்கூட்டினுள் அடைபட்டுக் கிடந்தேன்
ஒரு ஊசி முனையில் மாத்திரம் - என் 
சரித்திரம் எழுதி வைத்தேன்