Saturday, January 2, 2010

சத்தம்


சடசடவெனப் பெய்யுது மழை

சத்தம் மட்டுமே கேட்கின்றது!

வீல்வீலென்று அழுகிறது குழந்தை

காரணம் நானும் அறிகிலேன்!

தடதடவென ரயிலோசை

நேரம் இரவு ஏழு மணியெனப் புரிகின்றது!

டிக்டிக்கென கடிகாரச் சத்தம்

மின்சாரம் நின்றிருக்கக் கூடும்!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


பென்சிலுக்கு அழுத பிள்ளையின் குரல்

மளிகைக் கடைக்காரனிடம் மன்றாடிய மனைவியின் குரல்

மருத்துவச் செலவுக்கு மனுப்போட்ட தாயின் குரல்

எல்லாம் இப்போதுதான் இந்த செவிகளுக்கு எட்டுகின்றது!

பார்வையற்றுப் போனபின் தான் காது தெளிவாய் கேட்குமோ என்னவோ!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


No comments:

Post a Comment