ஒரு நாள் யாருமற்ற பூங்காவில் அவளும் நானும் அமர்ந்திருக்கின்றோம். அருகருகில். மழைப்பெய்து ஓய்ந்த ஒரு மாரிக்காலம்! மழை மேகங்கள் முழுதும் விலகாத ஒரு மந்தகாச நேரம்! தனிமையில் அவளும் நானும்! வான் நிலவு தோன்றும் முன்னே பூமியில் ஓர் பூரண நிலவாய் பொலிவான அவள் முகம்! கார்முகில்கள் சற்று சிந்திவிட்டனவோ எனத் தோன்ற வைக்கும் அவள் பட்டுக் கூந்தல், இளங்காற்றின் வேண்டுகோளுக்கு இணங்க மெலிதாய் அலைபாய்கின்றது! அலைபாய்வது அவள் கூந்தல் மட்டுமல்ல என் மனதும்தான். அவள் எதோ சுவாரசியமாக சொல்லிக் கொண்டு இருந்தாள். மெலிதாய் சிரித்தேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். நானோ சிரித்துக் கொண்டே இருந்தேன். பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். சிரிப்பதை நிறுத்தவில்லை நான். மெலிதாய் முறைத்தாள். மேலும் சிரித்தேன். எதற்கு சிரிக்கின்றாய் என்றாள். பதில் சொல்லவில்லை, சிரித்துக் கொண்டே இருந்தேன். செல்லமாய் அடித்தாள். வெடித்துச் சிரித்தேன். நான் போகிறேன் என பொய்க்கோபம் காட்டி புறப்பட எழுந்தாள். அவள் கையைப் பற்றினேன். சட்டென அவளை இழுத்தேன். இச்! இச்!!
Saturday, January 2, 2010
மாநகர பேருந்து
பெண்கள் தொட்டாற்சிணுங்கிகள் என அறியப்பட்டவர்கள்!
ஆண் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு மறக்கடிக்கப்பட்டது -
மாநகரப் பேருந்தில் பயணிக்கும் மகளிர்க்கு!
கட்டிய கணவன்மார்கள் சற்று மெனக்கெட வேண்டியிருக்கின்றது -
காதல் மனோநிலைக்கு மனைவிமார்களைக் கொண்டு வர!
பைக்கில் செல்லும் ஒரு தம்பதி
சில கண்கள் பெருமூச்சுடன் வெறிக்கின்றன -
பேருந்துக்குள் இருந்து!
ஏனோ பேருந்து பயணத்தையே நாடுகின்றது
சில முதிர்கன்னிகளின் மனம் மட்டும்!
Labels: kavithaigal, tamil poem, kadal, kaadal
bus,
chennai bus,
hardships in bus,
sufferings of women,
women in city bus
வீடு
சமையலறை
பல பெண்களின் பல்வேறு சாதனைகள் சமாதியாகும் இடம்!
குளியலறை
ஆதாம் ஏவாள் காலத்துக்கு நம்மை அவ்வப்போது அழைத்து செல்லும் Time machine!
வரவேற்பறை
வீட்டிற்கு வந்த விருந்தினர்களை வரவேற்கத்தான் யாருமில்லை!
Serial 'களில் சிந்தையை தொலைத்த மனிதர்கள்!
படுக்கையறை
படுத்தவுடன் தூங்கி போகின்றன பொடிசுகள்
சிற்சில உடற்பயிற்சிகள் செய்துவிட்டு தூங்குகின்றன சிறுசுகள்
பழைய நினைவுகளில் பெருமூச்சுடன் பெருசுகள்!
Friday, January 1, 2010
முதற்காதல்
அவள் மூச்சுக்காற்று - என்
வீட்டு ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கின்றது!
அவளின் சிரிப்பொலி - என்
வீட்டு சமையலறைப் பாத்திரங்களில் எதிரொலிக்கின்றது!
அவளது வாசம் - என்
வீட்டு பூஜையறையின் கற்பூரத் தட்டில் ஒட்டிக் கிடக்கின்றது!
அவளின் நினைவுகள் - என்
வீடெங்கும் வியாபித்திருக்கின்றது!
என் பால்ய பருவத்தில் - எங்கள்
வீட்டு மாடியில் குடியேறியது அவள் குடும்பம்!
என் இதயத்தில் குடியேறினாள் அவள் மட்டும்!
அதிகாலை நேரத்துப் பனியில்
இதழ் விரியாத - ஒரு
வெள்ளைச் செம்பருத்தி மொட்டு அவள்!
செக்கச் சிவந்த நிறம்
தக்கணுண்டு குட்டைப் பாவாடை
துறுதுறு கண்கள்
தாவிக் குதித்தோடிடும் நடை
கொள்ளைச் சிரிப்பு
வெள்ளைப் பேச்சு
எங்கள் தெருவுக்கு அவள் ஒரு குட்டி தேவதை!
எங்கள் வீட்டுக்கும்தான்!
எனக்கும் கூட!
ஒரே பள்ளி
ஒரே ஆட்டோவில் பயணம்
கண்விழித்துப் பார்த்து உணரும் காலை முதல்
கட்டாயத்துக்குட்பட்டு கண்மூடும் இரவு வரை
அவளும் நானும் ஒன்றாகவே!
விடுமுறை நாட்களுக்கு என்றுமே தனி வண்ணம்!
காலண்டரில் மட்டுமல்ல
நம் வாழ்விலும்தான்!
நாள் முழுக்க விளையாட்டு
வீட்டைச் சுற்றிச் சுற்றி நாங்கள் ஓடியதை - ஒரே
நேர்கோட்டில் ஓடியிருந்தால்,
கன்னியாகுமரி வரை ஒடி சூர்யோதயம் பார்த்திருப்போம்!
ஞாபகம் இருக்கிறதா பெண்ணே?
நம் அன்னையர் பலகாரங்களை அன்போடு பரிமாறிக்கொள்ள,
நாமோ குதூகலத்தைப் பரிமாறிக் கொண்டிருப்போம்!
நம் அன்னையர் பலகாரங்களை அன்போடு பரிமாறிக்கொள்ள,
நாமோ குதூகலத்தைப் பரிமாறிக் கொண்டிருப்போம்!
உன் வீட்டுச் சமையலறையில் நானும்
என் வீட்டுச் சமையலறையில் நீயும் ருசிப்பார்த்திருப்போம்!
உணவறையில் பரிமாறும் முன்னே பசியாறியிருப்போம்!
பள்ளி ஆண்டு விழாவில் உன் நடனம்!
குடும்பத்துடன் நாம் சேர்ந்துப் பார்த்த பாட்ஷா திரைப்படம்!
பொருட்காட்சி ரங்கராட்டினம்!
விருந்தினர் வருகைகள்!
கோவில் சென்ற வெள்ளிக்கிழமைகள்!
பரமபதம், கேரம்போர்ட் விளையாடிய தருணங்கள்!
பலப்பல நிகழ்வுகள் -
பல்லாயிரம் நினைவுகள்!
என் வாழ்வில் விளையாட்டாய் வந்தாய்
இன்றோ வேர்விட்ட மரமாய் நிற்கின்றாய்!
காதலெனும் சிறகுகள் முளைத்தப் பறவையானேன்
வாழ்நாள் முழுதும் உன்னோடு சேர்ந்துப் பறக்க விருப்பம் தெரிவித்தேன்!
மரங்களுக்குச் சிறகுகள் இல்லை என மறுதலிக்கின்றாய்!
காதல் சிறகைக் கத்தரித்துவிட்டு - உன்
கிளையில் நட்புடன் தத்தி தத்தி நடக்கின்றேன்!
மீண்டும் சிறகுகள் முளைக்காது என்றுதான் நினைக்கின்றேன்!
Labels: kavithaigal, tamil poem, kadal, kaadal
decent love,
my first love,
true love
Monday, September 7, 2009
விவசாயி
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த அரசாங்கம், விவசாயிகளின் துன்பத்தையும் தள்ளுபடி செய்துவிட்டதாகவே எண்ணி பேருவகை கொள்கிறது! அத்தோடு விவசாயிகளை மறந்தும் போகிறது! உண்மையில் விவசாயத்தின், விவசாயிகளின் நிலைதான் என்ன? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
ஈராயிரம் வருடம் பாதுகாத்து வந்த உலகப்பொதுமறையின் உண்மை இன்று கேலிக்கூத்தாகின்றது! சொல்லொணாத் துன்பங்கள்! தாங்கொணாத் துயரங்கள்! இதுவே இன்றைய விவசாயிகளின் நிலை. ஆயிரக்கணக்கு ஏக்கரில் நிலம் வைத்து ஆடம்பரமாய் வாழ்கிறவன் மாத்திரம்தான் விவசாயி என்று நினைத்தீரோ? அரைக்காணி நிலத்தை உழுது குடும்பச் சக்கரத்தை உருட்டுபவனும் விவசாயிதான்! மறந்துவிடதீர்கள்!
விவசாயத்திற்கு வாழ்வும் கேடும் இயற்கைதான். ஆனால் விவசாயிக்கு கேடு இருவரால் இன்று. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு விளைவித்த பண்டத்தை, பாதகத்தி மகன் இடைத்தரகன் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதென்ன? அதைக் கொள்ளை விலைக்கு விற்பதென்ன? விதைக்கையில் வேறுவழியின்றி வட்டிக்கு பணம் வாங்கி, விதைத்து, பாடுபட்டு, கதிரறுக்கையில் கழுத்தினில் கத்தி வைக்கிறான் கந்து வட்டிக்காரன்! பாதகம் செய்வோரை அன்று கொல்லவில்லை அரசு, நின்றும் கொல்லவில்லை தெய்வம். விவசாயி தோளில் சுமந்து செல்வது கலப்பையை மட்டுமல்ல, துயரத்தையுந்தான்!
ஓடி உழைக்கிறவன்
கூடி வாழ்கிறவன்
தேடிப்போவதில்லை சுகத்தை
வாடிப்போக விடுவதில்லை பயிரை!
கருக்கலில் கண்முழிப்பவன்
வாய்க்காலில் பல்துலக்குபவன்
கேணியில் குளிப்பவன்
கோணியில் தலைதுவட்டுபவன்
நெய்யூற்றி உண்பவனில்லை
மெய்வருத்த மறுதலிப்பவனில்லை!
காய்ந்துகெடுத்த இயற்கை பெய்தும் கெடுத்ததுவோ?
காப்பாற்ற வேண்டிய தெய்வம் கண்ணயர்ந்து போனதுவோ?
விதைவிதைக்கையில் கூட வந்த காலம்,
கதிரறுக்கையில் காலைவாரி விட்டதுவோ?
பட்டா நிலமது சுடுகாடாகிப்போனதுவோ?
மறுக்கப்பட்ட இனமோ விவசாய இனம்?
ஒடுக்கப்பட்ட சமூகமோ விவசாய சமூகம்?
பட்டாசு திரி சொருக
பாதகத்து பீடி சுத்த
சாலை சீரமைக்க
சாப்பாட்டுக்கடையில் மேசை துடைக்க
அடுக்குமாடிக் கட்டடங்களில் காப்பாளானாக
அடுக்களையில் எடுபிடியாக
குப்பைக்கூளம் அள்ளி வார
குளம் குட்டை தூர்வார
தண்ணீர் தெளித்து இஸ்திரி போட
சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய
பலே பலே! பல தொழில் கற்றுகொண்டுவிட்டானே விவசாயி!
அருமை அருமை! எவ்வளவு பெருமை நமக்கெல்லாம்!
அன்று அவன் விவசாயி
இன்றோ அன்றாடங்காய்ச்சி
மாறியது துன்பத்தின் விலாசம் மட்டுமே
மாறியது துன்பத்தின் விலாசம் மட்டுமே!
Subscribe to:
Posts (Atom)


