உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்குகின்றாய்!
மண் உன்னை உரமாய் கூட ஏற்க விரும்பாது என்பதை அறிவாயா?
காவிரியை தமிழகத்திற்கு கட்டி இழுத்து வருவேன் என சூளுரைக்கின்றாய்!
ஒவ்வொரு முறை நீ குளிக்கும்போதும்
தாம் இழிநிலை அடைந்ததை எண்ணி
தலையில் அடித்துக் கொள்ளுமாம் தண்ணீர்!
தமிழர்க்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என அறிக்கை விடுகின்றாய்!
அசுத்தத்தை எரிக்கும் நெருப்புக் கூட உன்னால்
அசுத்தமாவானேன் என விலகி ஓடும்!
காற்றுக்கென்ன வேலியென கொப்பளித்து பேசுகின்றாய்!
உன் நாசிக்குள் நுழைகையில்
மூச்சுத்திணறல் ஏற்பட்டு தவிக்கின்றது காற்று!
வானமே நமக்கு எல்லையென வீரமுழக்கமிடுகின்றாய்!
ஆதி அந்தம் இல்லாத ஆகாயம் உன்னைக் கண்டால்
ஓர் குடுவைக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளும்!
பஞ்ச பூதங்களும் வெறுக்கும்
பஞ்சமா பாதகம் புரியும் உம்மை
தமிழக மக்கள் எப்போதும்
மாண்புமிகுவென அன்போடு(?) அழைப்பர்!