Wednesday, February 24, 2010

ஊசிமுனை சரித்திரம்










வாய்ப்புகள் கதவைத் தட்டிய தருணத்தில்
காதினை இறுக மூடிக் கொண்டேன்
தேவதைகள் அப்படியே ஆகட்டும் 
எனக் கூறிய பொழுதில்   
என்னை நானே சபித்துக் கொண்டேன்!
பட்டாம்பூச்சியென சிறகடிக்க வேண்டிய பருவத்தில் 
பட்டுக்கூட்டினுள் அடைபட்டுக் கிடந்தேன்
ஒரு ஊசி முனையில் மாத்திரம் - என் 
சரித்திரம் எழுதி வைத்தேன்

அவளைச்சேர காத்திருக்கின்றேன்




அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க 
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க 
தன் தோழியைப்பர்த்து அவள் முறுவலிக்க 
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!


நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!


யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட! 
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும் 
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!


பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள் 
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!

Monday, February 15, 2010

நிராகரிப்பு






நீள் வட்டப்பாதையைக் கொண்டிருக்கிறது நிராகரிப்பு!
எவ்வளவு தாமதமானாலும்
தொடங்கிய இடத்திலேயே முடியவும் செய்கின்றது!
ஒவ்வொரு நொடியும்
உலகின் ஏதோவொரு உயிரிடத்தே
பதிகின்றது நிராகரிப்பின் சுவடு!
நிராகரிப்பில் விசித்திரம் ஏதுமில்லை!
ஒரு பொருளை விற்கும் வணிகன்
வேறொரு பண்டத்தை வாங்கவும் செய்வான்!
அதைப்போல
எப்போதோ யாராலோ நிராகரிப்புக்குள்ளானோர்
பிறிதோர் கணத்தில் 
எவரையோ நிராகரிக்கக் கூடும்!
சிலர் ஒரே சமயத்தில் 
நிராகரித்தும் நிராகரிக்கப்பட்டும் போகின்றனர்!
அவர்களுக்கு வாய்த்தது குறுகலானதொரு நீள்வட்டம்!
எவ்வளவு தேய்த்தெடுத்தாலும் தீருவதில்லை
ஆழ்மனதில் அப்பிக்கிடக்கும்
நிராகரிப்பின் தொன்மைப் படிவம்!


Wednesday, February 10, 2010

பிப்ரவரி 14





பிப்ரவரி 14'ஐ மையப்படுத்தி ஏதேனும் கவிதை எழுதவில்லையென்றால் நம்மை கவிஞன் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் கவிதை எழுத உட்கார்ந்தேன்! ம்ஹும்ம்! கற்பனைக் குதிரை புல் மேயச் சென்றிருக்கக் கூடும்! அப்போதுதான் இந்த மரமண்டைக்கு Wordsworth' ன் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது!
" Poetry is the Spontaneous Overflow of Powerful Feelings." சரி வேறு வேலையப் பார்ப்போம் என்று கிளம்ப எத்தனித்தபோது, கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்து கைகொடுத்தது!


அங்காடியில் கிடைக்காதது
அடித்துப் பிடுங்க முடியாதது
அள்ள அள்ளக் குறையாதது
அதிகம் கிடைத்தாலும் திகட்டாதது!
அது என்ன?


அமிழ்தினும் இனியது
அரும்பினும் மெல்லியது
அமைதியைத் தருவது
அனைவரும் விரும்புவது!
அது என்ன?


அன்பானது
அழகானது
அருமையானது
அவசியமானதும் கூட!
அது என்ன?


அனைத்துயிர்க்கும் வாய்த்தது!
ஆதாம் ஏவாளுக்கு மட்டும் வாய்க்காதது!
அது தாயன்பு!

Monday, February 1, 2010

கனவுகள், கேள்விகள், குழப்பங்கள்!





காய்ச்சல் நாட்களில் மட்டும்
ஏன் இத்தனைக் கனவுகள்?
காய்ச்சல் வரக் காத்திருக்கின்றனவோ கனவுகள்?




நேற்று சிரித்த கனவுக்கு
இன்று அழுகின்றான்!
குழப்பதில் ஆழ்ந்தது கனவுகளின் தேவதை!

கனவு





தேர்வினில் தோற்றுப் போவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


மலையுச்சியில் இருந்து விழுவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


என்னைக் காதலிப்பதாக நீ சொல்வதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்தேன்
ஏனோ எதையும் உறுதி செய்துக் கொள்ளவில்லை!

செய்தி



ஜனவரி 30
முக்கியச் செய்திகள்
இன்று
மகாத்மா காந்தி மறைந்த தினம்
மு.க அழகிரி பிறந்த தினம்!

பூப்போட்ட நீல நிறச் சுடிதார்



நேற்று நீ என் கனவினில் வந்தாய்
பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
கட்டிப் பிடித்து முத்தமிட்டேன்!
வெட்கப்பட்டுச் சிரித்தாய்!
இன்று நீ என் எதிரில் வந்தாய்
அதே பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
ஒரு கணம் தயங்கிவிட்டுதான்
கடந்து சென்றேன் உன்னை!