Tuesday, March 30, 2010
கோர்த்து வைத்த நட்பு
Wednesday, February 24, 2010
அவளைச்சேர காத்திருக்கின்றேன்
அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க
தன் தோழியைப்பர்த்து அவள் முறுவலிக்க
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!
நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட!
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும்
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!
பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள்
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!
Monday, February 15, 2010
நிராகரிப்பு
நீள் வட்டப்பாதையைக் கொண்டிருக்கிறது நிராகரிப்பு!
எவ்வளவு தாமதமானாலும்
தொடங்கிய இடத்திலேயே முடியவும் செய்கின்றது!
ஒவ்வொரு நொடியும்
உலகின் ஏதோவொரு உயிரிடத்தே
பதிகின்றது நிராகரிப்பின் சுவடு!
நிராகரிப்பில் விசித்திரம் ஏதுமில்லை!
ஒரு பொருளை விற்கும் வணிகன்
வேறொரு பண்டத்தை வாங்கவும் செய்வான்!
அதைப்போல
எப்போதோ யாராலோ நிராகரிப்புக்குள்ளானோர்
பிறிதோர் கணத்தில்
எவரையோ நிராகரிக்கக் கூடும்!
சிலர் ஒரே சமயத்தில்
நிராகரித்தும் நிராகரிக்கப்பட்டும் போகின்றனர்!
அவர்களுக்கு வாய்த்தது குறுகலானதொரு நீள்வட்டம்!
எவ்வளவு தேய்த்தெடுத்தாலும் தீருவதில்லை
ஆழ்மனதில் அப்பிக்கிடக்கும்
நிராகரிப்பின் தொன்மைப் படிவம்!
Wednesday, February 10, 2010
பிப்ரவரி 14
பிப்ரவரி 14'ஐ மையப்படுத்தி ஏதேனும் கவிதை எழுதவில்லையென்றால் நம்மை கவிஞன் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் கவிதை எழுத உட்கார்ந்தேன்! ம்ஹும்ம்! கற்பனைக் குதிரை புல் மேயச் சென்றிருக்கக் கூடும்! அப்போதுதான் இந்த மரமண்டைக்கு Wordsworth' ன் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது!
" Poetry is the Spontaneous Overflow of Powerful Feelings." சரி வேறு வேலையப் பார்ப்போம் என்று கிளம்ப எத்தனித்தபோது, கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்து கைகொடுத்தது!
அங்காடியில் கிடைக்காதது
அடித்துப் பிடுங்க முடியாதது
அள்ள அள்ளக் குறையாதது
அதிகம் கிடைத்தாலும் திகட்டாதது!
அது என்ன?
அமிழ்தினும் இனியது
அரும்பினும் மெல்லியது
அமைதியைத் தருவது
அனைவரும் விரும்புவது!
அது என்ன?
அன்பானது
அழகானது
அருமையானது
அவசியமானதும் கூட!
அது என்ன?
அனைத்துயிர்க்கும் வாய்த்தது!
ஆதாம் ஏவாளுக்கு மட்டும் வாய்க்காதது!
அது தாயன்பு!
Monday, February 1, 2010
கனவுகள், கேள்விகள், குழப்பங்கள்!
காய்ச்சல் நாட்களில் மட்டும்
ஏன் இத்தனைக் கனவுகள்?
காய்ச்சல் வரக் காத்திருக்கின்றனவோ கனவுகள்?
நேற்று சிரித்த கனவுக்கு
இன்று அழுகின்றான்!
குழப்பதில் ஆழ்ந்தது கனவுகளின் தேவதை!
கனவு
தேர்வினில் தோற்றுப் போவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!
மலையுச்சியில் இருந்து விழுவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!
என்னைக் காதலிப்பதாக நீ சொல்வதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்தேன்
ஏனோ எதையும் உறுதி செய்துக் கொள்ளவில்லை!
பூப்போட்ட நீல நிறச் சுடிதார்
நேற்று நீ என் கனவினில் வந்தாய்
பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
கட்டிப் பிடித்து முத்தமிட்டேன்!
வெட்கப்பட்டுச் சிரித்தாய்!
இன்று நீ என் எதிரில் வந்தாய்
அதே பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
ஒரு கணம் தயங்கிவிட்டுதான்
கடந்து சென்றேன் உன்னை!
Monday, January 18, 2010
காதலிலும் கலப்படம்
பிறை நிலவென நெற்றி - அதில்
சிறு அருவியென ஒரு நெற்றிச்சூட்டி!
சங்கென்று கழுத்து - அதை
எங்கென்று தேட வைக்கும் சங்கிலிச்சரங்கள்!
காதினில் குதித்தாடும் தொங்கட்டான்!
களுக்கென்று கைகளில் சிரிக்கும் வளையல்கள்!
இல்லாத இடுப்பின் இருப்பை அறிவிப்பதற்கெனவே
ஒரு ஒட்டியாணம்!
பட்டு பாவை வருகிறாள்! வருகிறாளெனக்
கூவும் கொலுசுகள்!
ம்ம்ம்.....
செம்பு கலந்த தங்கம்தான் பெண்ணின் மேனி தீண்டும்!
தூய சுவர்ணத்திற்கு அந்த மோட்சம் கிட்டாது!
புனைதல் கலந்த காதல்தான் பெண்ணின் மனதை அள்ளும்!
தூய காதல் சீந்துவாரின்றி சாகும்!
Saturday, January 9, 2010
ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்
Saturday, January 2, 2010
சத்தம்
சடசடவெனப் பெய்யுது மழை
சத்தம் மட்டுமே கேட்கின்றது!
வீல்வீலென்று அழுகிறது குழந்தை
காரணம் நானும் அறிகிலேன்!
தடதடவென ரயிலோசை
நேரம் இரவு ஏழு மணியெனப் புரிகின்றது!
டிக்டிக்கென கடிகாரச் சத்தம்
மின்சாரம் நின்றிருக்கக் கூடும்!
சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ
சத்தமில்லாமல் நகர்கின்றது!
பென்சிலுக்கு அழுத பிள்ளையின் குரல்
மளிகைக் கடைக்காரனிடம் மன்றாடிய மனைவியின் குரல்
மருத்துவச் செலவுக்கு மனுப்போட்ட தாயின் குரல்
எல்லாம் இப்போதுதான் இந்த செவிகளுக்கு எட்டுகின்றது!
பார்வையற்றுப் போனபின் தான் காது தெளிவாய் கேட்குமோ என்னவோ!
சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ
சத்தமில்லாமல் நகர்கின்றது!
இச்! இச்!
மாநகர பேருந்து
பெண்கள் தொட்டாற்சிணுங்கிகள் என அறியப்பட்டவர்கள்!
ஆண் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு மறக்கடிக்கப்பட்டது -
மாநகரப் பேருந்தில் பயணிக்கும் மகளிர்க்கு!
கட்டிய கணவன்மார்கள் சற்று மெனக்கெட வேண்டியிருக்கின்றது -
காதல் மனோநிலைக்கு மனைவிமார்களைக் கொண்டு வர!
பைக்கில் செல்லும் ஒரு தம்பதி
சில கண்கள் பெருமூச்சுடன் வெறிக்கின்றன -
பேருந்துக்குள் இருந்து!
ஏனோ பேருந்து பயணத்தையே நாடுகின்றது
சில முதிர்கன்னிகளின் மனம் மட்டும்!








